- July 10, 2021
- admin
- 0 Comments
- Uncategorized
ஐந்து கண்டங்களிலிருந்து ஒலிக்கும் ஐம்பெருங்காப்பியங்கள் !
கடந்த 24-ஆம் தேதி ஜனவரி மாதம் ஞாயிறன்று பிரான்சு தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் ‘ஐந்து கண்டங்களிலிருந்து ஒலிக்கும் ஐம்பெருங்காப்பியங்கள்’ என்ற தலைப்பில் மெய்நிகர் தொடர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஐரோப்பியா ஆகிய ஐந்து கண்டங்களிலிருந்து ஐந்து இலக்கிய ஆளுமைகள் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
பிரான்சு தமிழ் சங்க துணைத்தலைவர் திரு. தளிஞ்சன் முருகையா அவர்கள் நிகழ்விற்கு வருகைபுரிந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். பிரான்சின் தமிழ் சங்க பொருளாளர் திரு. கோகுலன் கருணாகரன் அவர்கள் வாழ்த்துரையும் செயற்குழு உறுப்பினர் புலவர் பொன்னரசு தொகுப்புரையும் வழங்கினர்.
பைந்தமிழ் பொழிவின் துவக்கமாக பிரான்சிலிருந்து முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க் (பிரான்சு தமிழ் சங்க துணைத்தலைவர்) அவர்கள் ‘பன்முக நோக்கில் சீவக சிந்தாமணி’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அடுத்ததாக, தமிழர்கள் செறிந்து வாழும் மொரீசியசு நாட்டிலிருந்து முனைவர் ர. உமா அழகிரி அவர்கள் (மகாத்மா காந்தி நிறுவனம்) ‘காப்பியங்களில் மாந்த நேயம்’ என்ற தலைப்பில் தனது உரையை வழங்கினார்.
அவருக்கடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து திருவாளர் அன்பு ஜெயா (நிறுவுநர், தமிழ் வளர்ச்சி மன்றம், சிட்னி) அவர்கள் ‘சிலப்பு சுட்டும் ஊழ்வினை’ எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து, அலிகார் முசுலீம் பல்கலைக்கழகம், உத்திரபிரதேசத்தில் நவீன மொழிகள் துறையில் பணிபுரியும் முனைவர் ர. தமிழ்ச்செல்வன் அவர்கள் ‘சிலப்பதிகாரத் திறன்’ குறித்து உரை நிகழ்த்தினார்.
அமெரிக்கா, வாஷிங்கடன் டி.சி.யிலிருந்து பங்கேற்ற எனர்ஜைல் நிறுவநர் திரு. மகேந்திரன் பெரியசாமி அவர்கள் ‘குண்டலகேசி வளையாபதி உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்கள்’ பற்றி தனது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்வின் இறுதியில் பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருமதி. எலிசபெத் அமல்ராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
பிரான்சு தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. தசரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை பிரான்சு தமிழ் சங்க துணைச்செயலாளர் திரு. மோரீஸ் ழெரார் அவர்கள் ஒருங்கிணைத்தார். நிகழ்வுக்கான தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பினை செயற்குழு உறுப்பினர் திரு. சிவா அவர்களும், திரு. ஜெய்சும் செய்திருந்தனர்.
Leave a Comment